கரூர்: கரூரில் அன்னகாமாட்சியம்மன் கோவிலில் நடந்த பூக்குழி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூர் நகரில் பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சியம்மன் கோவிலில் 91வது ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்றிரவு 8 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வரப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு பூக்குழி திருவிழா நடந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள், பயபக்தியுடன் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து, காலை 11 மணிக்கு அன்ன காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை 6 மணிக்கு கரகம் ஆற்றுக்கு செல்லும் விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.