நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களுள் ஒன்றான பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இவ்விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் நாகராஜன் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தில் அலுவலர்களுடனான ஆலோசயில் கலெக்டர் நாகராஜன் கூறியதாவது: மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில் மாசிக்கொடை பெருந்திருவிழா மார்ச் 2-ம் தேதி ஞாயிற்று கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. மார்ச் 7-ம் தேதி வலியபடுக்கை பூஜையும், 11ம் தேதி ஒடுக்கு பூஜையும், 18ம் தேதி எட்டாம் கொடை விழாவும், ஏப்ரப் 2ம் தேதி மீன பரணி கொடை விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு குமரி மாவட்டம் மற்றும் சுற்றிலும் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடப்படை வசதிகளை முழுமையாக விரைந்து மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மாவட்ட காவல்துறையும், பக்தர்களுக்கு போதிய பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகமும் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். மேலும் தற்காலிக கடைகள் அமைக்கும் போது தீப்பிடிக்காத தகடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு பணிகளுக்கு கண்காணிப்பு கோபுரங்கள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும்.கடலில் நீராடும் பக்தர்களுக்கு தேவையான படகு மற்றும் நீச்சல் வீரர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் எஸ்.பி மணிவண்ணன், பத்மநாபபுரம் ஆர்.டி.ஒ அருண் சத்யா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் நடராஜன் அலவலர்கள் கலந்து கொண்டனர்.