பதிவு செய்த நாள்
20
பிப்
2014
10:02
தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த திருவையாறு காவிரி கரையில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் புனித இசை திருவிழாவை பல்வேறு அமைப்பினர் இணைந்து, நாளை (21ம் தேதி) முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்துகின்றனர். இதுகுறித்து, தஞ்சையில், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார், மரபு பவுண்டேஷன் நிறுவனர் ராமகவுசல்யா, சென்னை பிரஹிருதி பவுண்டேஷன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீரா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சை அருகே திருவையாறில், காவிரிக் கரையில் உலகத்தில் உள்ள அனைத்து இசை மரபுகளையும் இணைத்து நடத்த பிரஹிருதி பவுண்டேஷன் திட்டமிட்டது. இதன்படி, ஆண்டுதோறும் இசை திருவிழாவை பிரபல கலைஞர்களை அழைத்து, நடத்தி வருகிறது. இதன்மூலம் பண்டைய கலை மரபுகளைக் காப்பதும், உள்ளூர் மாணவ, மாணவியருக்கு இசை அறிவூட்டுவதும், வெளியூர் பயணிகள் இடையே திருவையாறு பகுதியை பிரபலமாக்குவதும் நோக்கமாகும். திருவையாறு, காவிரி கரையில், மூன்று அமைப்புகள் இணைந்து நடப்பாண்டு நாளை (21ம் தேதி) முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் புனித இசை திருவிழா நடத்தப்படும். 21ம் தேதி காவிரி பாலம் அருகே திவான் வாடா அரண்மனையில் வித்யா ஷா குழுவினர் இந்துஸ்தானி குரலிசை நடக்கிறது. வரும் 22ம் தேதி காவிரி புஷ்ய மண்டப படித்துறையில் உமையாள்புரம் சிவராமன் குழுவினர் இந்திய தாளவாத்திய கச்சேரி, 23ம் தேதி பஞ்சநதீஸ்வரர் கோவில் அம்மன் சன்னதி அருகில் ஷஷாங் சுப்பிரமணியம் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடக்கும். மூன்று நாட்களும் அனைத்து நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு துவங்கி, 9.30 மணி வரை நடக்கும். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, முன்னதாக, தென்னக பண்பாட்டு மையத்தில், மாணவ, மாணவியருக்கு பக்தி பாடல் போட்டி நடந்தது. இதில், 200 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், தஞ்சை எம்.கே., அகாடமி செல்வி மகாலட்சுமி குழுவினர் முதல்பரிசு 5,000 ரூபாய், கும்பகோணம் அன்னை பஜன் மண்டலி, வெங்கடேஷ் குழுவினர் 2ம் பரிசாக 3,000 ரூபாய், தஞ்சை எம்.கே., அகாடமி செல்வி காருண்யா குழுவினர் மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் பெற்றனர். இவர்களும், இசை திருவிழாவில் பங்கேற்கின்றனர். இவ்விழாவையொட்டி, திருவையாறு காவிரி கரையை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு நடைபயணத்தில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இதற்காக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 98424 55765, 98406 66761 ஆகிய மொஃபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.