பதிவு செய்த நாள்
22
பிப்
2014
10:02
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக தோரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேர் திருவிழா, கடந்த, 14ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான, மாசிமக தோரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. முதலில் அலங்கரிக்கப்பட்ட தரில், விநாயகர் ஊர்வலத்தை, பக்தர்கள், 2.45 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து, கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர் தேரும், மூன்றாவதாக வடிவாம்பிகை தேரும், இழுத்து வரப்பட்டு, நிலையை அடைந்தது. தேரின் மீது, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், நவதானியங்களை வீசியும், பொறி, முத்துக்கொட்டை, மிளகு உள்ளிட்டவை தூவி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவுக்கு, பெங்களூரூ, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில், அரூர் யூனியன் சேர்மன் தென்னரசு, டி.எஸ்.பி., சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.