பதிவு செய்த நாள்
24
பிப்
2014
11:02
விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம் இன்று 23ம் தேதி துவங்குகிறது. விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், இன்று துவங்கி மார்ச் 5ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை 8:30 மணிக்கு மேல் மணிமுத்தாற்றிலிருந்து சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சி, 10:30 மணிக்கு மேல் கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி, இரவு ஈஸ்வரன் பித்து பிடித்ததும், இரவு அம்மன் சுயரூபத்துடன் வீதியுலா நடக்கிறது. வரும் 27ம் தேதி பகல் 12:00 மணிக்கு குறத்தி வேடத்தில் குறிசொல்லுதலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் சுய ரூபத்துடன் நிசாசனி வயிற்றை கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிந்து, குழந்தையை முறத்தில் ஏந்தி வரும் ஐதீகமும், இரவு 12:00 மணிக்கு மேல் 4:00 மணிக்குள் புண்ணிய மடுவு சென்று சக்தி அழைத்து, அம்மன் சோதனை காட்சிகள் நடக்கின்றன. 28ம் தேதி அதிகாலை அம்மன் ஈஸ்வர ரூபத்துடன் மணிமுத்தாற்றில் சுடலை சென்று விருந்து கொல்லுதல், மாலை 4:00 மணிக்கு மயானக் கொள்ளை நடக்கிறது. மார்ச் 1ம் தேதி அங்காள பரமேஸ்வரி, தாண்டவராய சுவாமி திருக்கல்யாணம், 2ம் தேதி இரவு அம்மன் சோதனை கரகம் வீதியுலா, 3ம் தேதி தேர்த் திருவிழா, 4ம் தேதி செடல் உற்சவம், இரவு பாரதமாதா வீதியுலா, 5ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கின்றன.