பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவராத்திரி விழா முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்கள் மற்றும் அம்மன் கோவில்களில் நேற்று(27ம் தேதி) சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே திருநடை திறக்கப்பட்டு அபிஷேகம், சந்தணக்காப்பு மற்றும் வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கைலாச நாதரை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் இரவு விடிய, விடிய பரதநாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதுபோன்று திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிவராத்திரி முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இரவு விடிய, விடிய சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரிமளம் அடுத்த சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவு செய்தனர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு அக்னி ஏந்தி அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதுபோன்று புதுக்கோட்டை மனோன்மணி அம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிவரத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.