பதிவு செய்த நாள்
28
பிப்
2014
05:02
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா நேற்று மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக இன்று காலை மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்ததால் கோபமடையும் சரஸ்வதி தேவி, சிவபெருமானின் கரத்தில், பிரம்ம கபாலம் ஒட்டிக்கொள்ளும் படி சாபமிடுகிறார். சிவபெருமானுக்கு படைக்கும் உணவை பிரம்ம கபாலம் உண்டு விடுவதால், பசியால் வாடும் சிவபெருமான் பித்து பிடித்து அலைந்து, திரிந்து சிவராத்திரியன்று இரவு மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் இங்கு நடக்கும் மயான கொள்ளையில் பார்வதியின் அம்சமான அங்காளம்மன் சிவனுக்கு படைக்கும் உணவை எடுக்க வரும் பிரம்ம கபாலத்தை விஸ்வரூபம் எடுத்து தரையில் மிதித்து ஆட்கொள்கிறார். சிவபெருமான் சாபம் நீங்கி ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்.
இதை நினைவு கூறும் நிகழ்ச்சியே மேல்மலையனூரில் இன்று நடந்தது. கோவில் ஐதீகத்தின் படி அக்னி ஜூவாலையாக அங்காளம்மன் கோபத்தில் இருப்பதை உணர்த்த மயானக்கொள்ளைக்கு புறப்படும் முன்பு கோவில் புற்று வாசலில் திரைக்கு தீவைத்து எரித்து மயானத்திற்கு புறப்பட்டனர். விஸ்வரூப அலங்காரத்தில் அங்காளம்மனை தேரில் ஏற்றி மயானத்திற்கு கொண்டு வந்தனர். தேருக்கு முன்பாக பிரம்ம கபாலத்தை எடுத்து சென்றனர். மயானத்தில் பக்தர்கள் படையலிட்டிருந்த உணவு பொருட்களை காலை 9.20 மணிக்கு வீசீ எரிந்து கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. அங்காளம்மன் ஊர்வலம் வந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்களை வாரி இறைத்து நேர்த்திகடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கானவர்கள் சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடினர். உயிர் கோழியை வாயல் கடித்து பலி கொடுத்தனர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.