பதிவு செய்த நாள்
03
மார்
2014
12:03
திருப்பூர்: இப்பிறப்பில் வாழ்வதை பொறுத்தே, மறுபிறப்பு அமைகிறது. அதனால், மனிதனுக்கு முழு சுதந்திரத்தை இறைவன் வழங்கியுள்ளார், என, ஆன்மிக சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசினார். ஸ்ரீமத் பாகவத சப்தாஹ பிரவாசனம் நிகழ்ச்சி, திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசியதாவது: இவ்வுலகில் கோடிக்கணக்கான உரியினங்கள் இருந்தபோதிலும், மானிடப்பிறவிக்கு தனி மகத்துவம் உள்ளது; இப்பிறப்பில், வாழ்வதை பொறுத்தே மறுபிறப்பு அமைகிறது. அதனால்தான், மனிதனுக்கு பகவான் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். இந்த உடல், உடலுக்குள் இருக்கும் மனம், சிந்தனை இவையாவும் நாமல்ல; நாம் அனைவரும், பரபிரம்மம் எனும் உண்மையை உணர வேண்டும். கலியுகத்தில் எல்லாமே வேஷமாக இருக்கும். இந்த யுகம் துவங்கியபோது, பூமிக்கு வந்த நாரதர், உண்மையான பக்தியை காண முடியாமல், திரும்பினார். அவரை தடுத்த சனத்குமாரர், "மனிதர்கள் உய்வதற்கு, பாகவத கிரந்தங்களை பரப்ப வேண்டும் என்றார். அதன்படி, நாரதர், ஸ்ரீமத் பாகவதத்தை பரப்பினார்.
ஆத்மதேவன் என்கிற பிராமணன், குழந்தை இல்லையே என்று வருந்தி, காட்டில் அமர்ந்து, அழுதான். அங்கு வந்த முனிவர், அவனது தலைவிதியை வாசித்து, "ஏழு ஜென்மத்துக்கும் பிள்ளை பாக்கியம் இல்லை என்றார். ஆத்மதேவன் உபாயகம் கேட்க, ஜெபம் செய்த மாங்கனியை கொடுத்தார், முனிவர். மாங்கனியை மனைவி துந்துவியிடம் கொடுத்த ஆத்மதேவன், புனித யாத்திரை சென்றான். துந்துவியோ, மாங்கனியை உண்ணாமல், பசுவுக்கு கொடுத்தாள். ஆத்மதேவன் வந்தபோது, தனது தமக்கைக்கு பிறந்த துந்துகாரி என்கிற குழந்தையை, தனக்கு பிறந்தது என்றாள், துந்துவி. முனிவர் கொடுத்த மாங்கனியை உண்ட பசு, மனித உடலில், மாட்டு காதுடன் கோகர்ணன் என்கிற குழந்தையை பெற்றெடுத்தது. நாட்கள் உருண்டோடின. சூதாட்டம், மது அருந்துதல் என்றிருந்த துந்துகாரி, ஆத்மதேவனை அடித்து விரட்டி விட்டான்; பணம் கேட்டு, துந்துவியையும், சக நண்பர்களையும் கூட கொன் றான்; அவனும் மடிந்தான். உடனே, கோகர்ணன் கயாவுக்கு சென்று, இறந்தவர்களுக்கு பிண்டம் போட்டான்; ஆனா லும், அவர்களது ஆன்மா சாந்தி பெறாமல், அலைந்து திரிந்தது. வேதங்கள் கற்ற கோகர்ணன், அந்த ஏழு ஆன்மாக்களையும், ஒரு மூங்கிலில் ஏழு துவாரங்களில் அடைத்து, பாகவதத்தை ஓதினான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துளையாக வெடித்தது. ஏழாவது நாள், பாவங்கள் நீங்கியதோடு புண்ணியமும் பெற்று, மகாவிஷ்ணு போன்ற தோற் றத்தில் துந்துகாரி வந்தான்; அவனுக்கு வைகுண்டலோகமும் கிடைத்தது. பாகவதத்தை கேட்டால், ஏழு ஜென்ம பாவங்கள் நீங்கும். இவ்வாறு, அவர் சொற்பொழிவு ஆற்றினார்.