பதிவு செய்த நாள்
04
மார்
2014
11:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறு நாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. நாளை (5ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தேர்திருவிழா நடக்கிறது. நேற்று மாலை, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வார வழிபாட்டு மன்றம் சார்பில் தீமிதி விழா நடந்தது. முன்னதாக, அலங்கரித்த அம்மனும், காப்பு கட்டிய பக்தர்களும் அக்னி குளத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். அலகு குத்திய பக்தர்கள் லாரிகளில் தொங்கியும், லாரிகளை இழுத்தும் வந்தனர்.அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர் கலந்து கொண்டனர். கோவில் முன் அமைத்திருந்த தீக்குண்டத்தில் சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் இறங்கினார். தொடர்ந்து, கோவில் மேலாளர் முனியப்பன் மற்றும் கோவில் பூசாரிகள், பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு 8 மணி வரை தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திண்டிவனம் டி.எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் போலீசாரும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.