பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
திருப்பூர்: கோவில்களில் தங்கம், ஐம்பொன், வெண்கலம், பித்தளை உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில், உற்சவர் சிலைகள் உள்ளன. சிலைகள் திருட்டு போனால், அதன் போட்டோ, அவற்றின் முழு விவரம் இல்லாமல், கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கோவில் சிலைகளை திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, கோவில்களில் உள்ள சிலைகள், விலை மதிக்க முடியாத பொருட் கள் பட்டியலை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. சிலையின் முன்பக்கம், பின்பக்க தோற்றத்துடன் போட்டோ மற்றும் சிலையின் உயரம், அகலம், எடை, பீடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. நூற்றாண்டுக்கு முந்தைய சிலையா, தற்போதையதா என்பன உள்ளிட்ட தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், "சிலைகள் திருடப்பட்டால், கண்டுபிடிக்க எளிதாகவும், கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும், சிலைகள் குறித்துஆவணப்படுத்தவும், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் ஒரு பிரதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, சிலைகள் பற்றிய தகவல்கள், போட்டோக்களை உடனடியாக அனுப்ப உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர், என்றனர்.