பதிவு செய்த நாள்
14
மார்
2014
10:03
பேரூர் : பேரூரா, பட்டீசா கோஷம் முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் கோவில்தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.பங்குனி உத்திர தேர்த்திருவிழா, மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, யாகசாலை பூஜை செய்யப்பட்டு, காலை 7.30 மணிக்கு விநாயகர், முருகன், பட்டீஸ்வரர், பச்சைநாயகி, சண்டிகேஸ்வரரை தேரில் எழுந்தருள செய்து, காலை முதல் திருத்தேர் புறப்படும் வரை சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 3.45 மணிக்கு தேரை, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பேரூரா, பட்டீசா கோஷம் முழங்க மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர், பேரூரின் முக்கிய வீதிகளில் அழகாக அசைந்து, அசைந்து சென்றது. இரவு 7.50 மணிக்கு பட்டீஸ்வரர் தேர்நிலையை அடைந்தது. பின், பச்சைநாயகி அம்மன் தேரோட்டம் துவங்கியது.