பதிவு செய்த நாள்
21
மார்
2014
10:03
சத்தியமங்கலம்: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும், தாளவாடி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. பூசாரி மட்டும் தீ மிதித்தார். சத்தியமங்கலம் அடுத்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்குள்ள, இஸ்லாமியர் வழிபாட்டு தளமான, தர்காவுக்கு முன், மாரியம்மன் கோவில் அமைந்து, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா நடந்தால், இப்பகுதி இஸ்லாமியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். இதேபோல், இங்குள்ள தர்காவில் விழா நடந்தால், இப்பகுதி இந்துக்கள் ஒத்துழைப்பு கொடுப்பர். புகழ்மிக்க தாளவாடி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா நேற்று காலை நடந்தது. கோவில் பூசாரி ராஜன்னா மட்டும் தீ மிதிப்பது வழக்கமாகும். இதன்படி கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில், பூசாரி ராஜன்னா மட்டும் தலையில் அம்மன் சிலையை சுமந்தவாறு, தீ மிதித்தார். முன்னதாக மாரியம்மன் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூசாரி தீ மிதிக்கும் முன், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மாரியம்மன் வீதிஉலா நடந்தது. பூசாரி தீ மிதிப்பதை இந்து, இஸ்லாமியர் என அனைத்து மத மக்களும் ஆர்வத்துடன் பார்த்து வணங்கினர்.