பதிவு செய்த நாள்
03
ஏப்
2014
10:04
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவில், நேற்று சின்ன மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், கடைவீதி வழியாக, "மாரியம்மா கோஷத்துடன் வலம் வந்தது. ஈரோடு, பிரப் ரோடு பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, மார்ச், 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில் பண்டிகை களை கட்டியுள்ளது. விழாவில், நேற்று காலை சின்ன மாரியம்மன் கோவில் தேர் நிகழ்ச்சியை, டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா வடம் பிடித்து துவக்கி வைத்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டதேரை, நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் சேர்ந்து இழுத்தனர். சின்னமாரியம்மன் கோவிலில் புறப்பட்ட தேர், டவுன் பொன் (நகைக்கடை) வீதியில் பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலையில் புறப்பட்ட தேர், வாசவி மஹாலில் இரவு நிறுத்தப்படும். இன்று காலை வாசவி மஹாலில் இருந்து புறப்பட்டு, ஈரோடு நகர கூட்டுரவு வங்கி அருகில் நிறுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை, நான்கு மணிக்கு, அங்கிருந்து தேர் புறப்பட்டு, சின்ன மாரியம்மன் கோவிலில் புறப்பட்டு நிலையை சென்றடையும். தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு கடைவீதியில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நீர் மோர், குளிர்பானம், பொங்கல், கேசரி உள்ளிட்ட இனிப்புகளை வழங்கினர்.