பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
11:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில்சித்திரை தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி அருகே புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு, மும்மூர்த்திகளால், ஸ்ரீரங்கம் கோவிலினை ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானதி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால், இத்திருக்கோவவிலிலும் ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் மூலவரைப் போன்று, சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக, 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில், இங்கு மாரியம்மன் அருள் பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் மரபுமாறி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க, அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள், பச்சை பட்டினி விரதம், இருப்பது இத்திருக்கோவிலில் சிறப்பு அம்சமாகும். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம், இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். பச்சை பட்டினி விரதம் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை நடைபெறும்.
இந்த வகையில் மார்ச் 9ம் தேதி அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு, பூச்சொரிதல் விழா துவங்கியது. அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு, அம்மனின் பச்சை பட்டினி விரதமும் துவங்கியது. 2வது பூச்சொரிதல் விழா கடந்த 16ம் தேதியும், 3ம் பூச்சொரிதல் விழா கடந்த 23ம் தேதியும் 4வது பூச்சொரிதல் விழா கடந்த 30ம் தேதியும் நடந்தது. பக்தர்களுக்காக அம்மன் இருந்த பச்சை பட்டினி விரதம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்தில் சிறப்பு தீபாராதனைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7.30 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தொடர்ந்து தினமும் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், மரக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ம் திருநாளான வரும் 15ம் தேதி சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல், 11.31 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருத்தேரிலிருந்து அம்மன் புறப்பாடாகி மூலஸ்தானம் அடைகிறார். ஏப்ரல் 18ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்து, மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.