பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
10:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, நடந்த கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். உடுமலை மாரியம்மன் கோவில், திருத்தேர்த் திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு, திருவிழா கம்பம் போடப்பட்டது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், திருக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தி முழக்கங்கள் முழங்க, கும்பங்கள் அணிவகுத்துச் செல்ல மேள, தாளத்துடன் பக்தர்களால் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட திருக்கம்பம், கோவில் கொடி மரத்துக்கு முன், நடப்பட்டது. இதைதொடர்ந்து, பூவோடு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளுக்குப் பின், திருக்கம்பத்துக்கு மஞ்சள் நீரால் அபிேஷகம் செய்யப்பட்டது. அபிேஷகத்தை தொடர்ந்து, பக்தர்கள் திருக்கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.உடுமலை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கவுதமன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். தேர்த்திருவிழாவில் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகளும், நாளை மதியம் 12.30 மணிக்கு, கொடியேற்றமும், மதியம் 2.00 மணிக்கு பூவோடு துவக்க விழா நிகழ்ச்சியும் நடக்கின்றன.