பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நடந்த கமலத் தேர் திருவிழா வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. வீதியுலா இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 4ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. உற்சவர் சோமாஸ்கந்தர், தினமும் காலை, இரவு ஆகிய வேளைகளில் ஒவ்வொரு வாகனத் தில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று, கமலத் தேர் திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 9:30 மணிக்கு, உற்சவர் சோமாஸ்கந்தர், வண்டார் குழலியம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி உட்பட, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து, அரோகரா, அரோகரா என, பக்தி முழக்கத்துடன் மாடவீதியில் இழுத்து சென்றனர். அப்போது, நீர்மோர், சுண்டல், புளியோதரை வழங்கப்பட்டது. மதியம், 12:15 மணிக்கு கமலத் தேர் கோவிலின் பின்புறம் உள்ள காளிகோவில் அருகே வந்து நின்றது. பின்னர், மாலை, 3:30 மணிக்கு மீண்டும் தேர் புறப்பட்டு, மாலை, 6:௦0 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு, 9:00 மணிக்கு கேடய வாகனத்தில் உற்சவர் சோமாஸ்கந்தர் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள்விழாவில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.