உசிலம்பட்டி சடையாண்டி கோயில் கிடா வெட்டு: பெண்களுக்கு அனுமதியில்லாத விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 05:04
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வின்னகுடி சடையாண்டி கோயிலில் கிடா வெட்டு விழா நடந்தது. பெண்களுக்கு அனுமதி இல்லாத இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி இரவு வழிபாடு நடத்தினர். வின்னகுடி கிராமத்திற்கு அருகே சடையாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் சுற்றுவட்டார கிராமத்தினர் வின்னகுடி விநாயகர் கோயில் முன்பாக ஆட்டுக்கிடா வாங்கி நேர்ந்து விடுகின்றனர். இந்த கிடா சுற்றுப்பகுதி கிராமங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கிவிடுகிறது. கிராம மக்கள் சடையாண்டி கோயில் கிடா என்றால் சாமி நம் இடத்திற்கு வந்துள்ளார் என கருதி வளர்க்கின்றனர். ஒரு ஆண்டு நிறைவு பெற்றதும் இந்த கிடாக்கள் அனைத்தும் வின்னகுடி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். சிறப்பு வழிபாடுகளுக்கு பின்பு கிடாக்கள் அருகில் உள்ள சடையாண்டி கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இரவில் கிடாக்கள் வெட்டி பலி கொடுத்து வழிபாடு நடக்கும். இந்த இரவு வழிபாட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை. நேற்று முன்தினம் இரவு நடந்த வழிபாட்டில் 52 கிடாக்கள் பலியிடப்பட்டு வழிபாடு நடந்தது. சுற்றுப்பகுதி கிராம ஆண்கள் இரவு வழிபாட்டில் கலந்து கொண்டு கறிவிருந்து உண்டு சடையாண்டியை வழிபட்டு சென்றனர்.சொக்கத்தேவன்பட்டி கிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் தொடர்கிறது. 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் வரும். இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தினால் ஏராளமான கிடாக்கள் இறந்து போனது. நேற்றைய வழிபாட்டில் 52 கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டன. மழை வரம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த வழிபாடு நடக்கிறது என்றார்.