பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
11:04
வத்திராயிருப்பு : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகே உள்ள அழகிய மணவாள பெருமாள் கோயிலில், விஷூகனி வழிபாடு நடந்தது.புராண காலத்து சிறப்பு வாய்ந்த இக்கோயில், வத்திராயிருப்பில் அர்ஜூணா நதிக்கரையில் அமைந்துள்ளது. நீண்ட காலமாக புதர்மண்டி கிடந்த இக்கோயில், பக்தர்கள் நிதி, அரசு நிதி மூலம், ரூ.2 கோடி மதிப்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, அங்கு பாரம்பரிய பூஜைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் மீண்டும் துவங்கின. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, இங்கு, தமிழ் புத்தாண்டு வழிபாடு, நேற்று, விமரிசையாக நடந்தது. அதிகாலையில், சுவாமிக்கு சுப்ரபாத வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, மூலஸ்தான சன்னதி முழுவதும், பல்வகை பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு, சித்திரை விஷூ கனி வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை, பக்தசபா நிர்வாகிகள் குமார் கிருஷ்ணன், ராஜாளி செய்தனர்.