பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
01:04
பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக, மலைக்கோயிலில், தங்கரத தேரோட்டம் 5 நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. விழா நிறைவடைந்ததால், மீண்டும் இன்று இரவு 7:00 மணிக்கு, வழக்கம் போல் தங்கத்தேரில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,7 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, இன்று வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு வாகனங்களில், சன்னதி வீதி, கிரிவீதியில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், திருவுலா நடந்தது. ஏப்., 12, திருக்கல்யாணமும், ஏப்., 13 ல் தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வையாபுரி குளத்தில் வாணவேடிக்கை நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு சுவாமி தங்ககுதிரை வாகனத்தில் திருவுலாவும், இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்கமும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில், முத்துகுமார சுவாமி, வள்ளி,தெய்வானையுடன் பெரியநாயகியம்மன் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏப்., 11 முதல் 15 வரை நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு, பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுவதால், மலைக்கோயிலில் வழக்கம்போல் இன்று முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு நடைபெறும். பழநியில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் பட்டாசுகள் சீறிப்பாய பின்புறம் மின்னொளியில் மலைக்கோயில் ஜொலித்தது.