பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
12:04
சத்தியமங்கலம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பண்ணாரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள அம்மன் கோவில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்களிடையே, மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த மாதம், இக்கோவிலில், குண்டம் விழா நடந்தது. இதில் லட்கணக்கான பக்தர்கள், தீ மிதித்தனர். தமிழகத்தில், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பண்ணாரி கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான பள்ளிகள் கோடை விடுமுறை விடப்பட்டாலும், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் நேற்று, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால், பண்ணாரி கோவிலுக்கு குடும்பத்துடன் பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து சென்றனர். இதனால் பண்ணாரி கோவில் வளாகத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. நேற்று வெள்ளிகாப்பு அலங்காரத்தில், பண்ணாரி அம்மன் அருள் பாலித்தார்.