பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
05:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை சுகாதாரம், சுற்றுலா வளர்ச்சி பணிகளை, மதுரை ஐகோர்ட் குழுவினர் ஆய்வு செய்தனர். ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் கோயில், அக்னி தீர்த்த கடற்கரையில் இடையூறு இன்றி, சுகாதாரமாக நீராடவும், சுற்றுலா பயணிகள் அடிப்படை வசதியுடன் பொழுது போக்கு அம்சங்கள் நிறைவேற்றிட, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ராமேஸ்வரம் கோயில், நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றிய பணிகள் குறித்து, மதுரை ஐகோர்ட் ஆய்வு குழுவின் வக்கீல்கள், பலமுறை ஆய்வு செய்தனர். இந்நிலையில், ராமேஸ்வரம் வந்த மதுரை ஐகோர்ட் ஆய்வு குழு வக்கீல்கள் கிருஷ்ணவேணி, சீனிவாச ராகவன் ஆகிய இருவரும், அக்னி தீர்த்த கடற்கரையில் சுகாதார பராமரிப்பு, அக்னி தீர்த்தத்தில் கலக்கும் கழிவுநீரை தடுத்து சுத்திகரித்தது, அக்னி தீர்த்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை ஆய்வு செய்தனர். பின்னர், நகராட்சி கமிஷனர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அய்யப்பனிடமும், கோயிலில் சுகாதார பணிகள், தீர்த்த கட்டணம் குறித்து, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனனுடன் ஆலோசனை நடத்தினர்.