பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
12:04
ஆர்.கே.பேட்டை : கிராமத்தினரின் கோஷ்டி பூசலால், 10 ஆண்டுகளாக தீமிதி திருவிழா கைவிடப்பட்டு உள்ளது. ஆனால், பாரம்பரியம் மாறாமல், சிறுவர்கள், திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நேற்று காலை, 18ம் போர் அர்ச்சுணன் படுகளம் நடந்தது. ஆர்.கே.பேட்டை, அண்ணா நகரில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. கிராமத்தில் நீர் வளம், நில வளம் பெருக, அனைத்து தொழில்களும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, கோடையில், திரவுபதியம்மனுக்கு அக்னி வசந்த உற்சவம் நடத்தப்படும். விழாவின் போது, மகாபாரத பிரசங்கம், தெருக்கூத்து நடக்கும். அதில், வாழ்க்கைக்கு தேவையான தர்ம நெறிகள் விளக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆர்.கே.பேட்டை மக்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டிபூசலால், திருவிழா நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், தெருக்கூத்து, மகாபாரத நிகழ்வுகளால் கவரப்பட்ட சிறுவர்கள், தாங்களாக கோவில் அமைத்து, ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், சிறுவர்களின் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், வழக்கமான, ஜெய கொடி, அர்ச்சுணன் தபசு, வில் வளைப்பு, ராஜசுய யாகம், சொற்பொழிவு, தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. நேற்று காலை, 18ம் போர் அர்ச்சுணன் படுகளம் நடந்தது. இதில், பீமன், அர்ச்சுணன், காந்தாரி வேடமிட்டு சிறுவர்கள், போர் புரிந்தனர். மாலையில் தீமிதி திருவிழா நடந்தது.