பதிவு செய்த நாள்
30
ஏப்
2014
01:04
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வருண ஜெபத்துக்கு கைமேல் பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். தமிழகத்தில் மழை வேண்டி, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வருண ஜெபம், யாகம், பூஜை நடத்தப்பட்டது. இன்னும் சில கோவில்களில் அமிர்த வர்ஷிணி, மேகவர்ஷிணி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூப கல்யாணி உள்ளிட்ட மழைக்கான ராகங்களை இசைக்கும் ராக ஆராதனையும் நடந்தது. தமிழகம் முழுவதும் அனைத்துக் கோவில்களிலும், ஒரே நாளில் மழை வேண்டி பூஜை நடத்தப்பட்டதால், கைமேல் பலன் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்ப, பூஜை நடந்த நேற்று முன்தினமே சில இடங்களில் மழை பெய்தன. நேற்று காலையிலிருந்து திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழைக்கான அறிகுறி தென்பட்டது. இத்தனை நாட்களாக சுட்டெரித்த சூரியன் மறைந்து, நேற்று காலையிலிருந்து மேக மூட்டம் காணப்பட்டது.எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பக்தர்களும், மக்களும் உள்ளனர்.