திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ராமானுஜ ஜீயரின் இறுதி சடங்கு நடந்தது. புதிய ஜீயராக தண்டு நாராயணன் மதுரகவி பொறுப்பேற்றுக்கொண்டார். நாங்குநேரி தோத்தாத்ரி நாதர் கோயில் பழமையானது. இங்கு 1410ல் ஏற்படுத்தப்பட்ட வானுமாமலை மடத்தின் 30வது ஜீயர் கலியன் ராமானுஜர் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது இறுதி சடங்கு நேற்று நாங்குநேரியில் திருவரசு வளாகத்தில் நடந்தது. நேற்று பகல் ஒரு மணிக்கு, அவரது உடல் பல்லக்கில் எடுத்துச்செல்லப்பட்டது. அவரது இறுதி சடங்கில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்றனர். நாங்குநேரியை சேர்ந்த தண்டு நாராயணன் புதிய ஜீயராக நேற்றுமுன்தினம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் 27வது ஜீயராக இருந்தவரின் பேரன். அவர் இனி மதுரகவி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் என அழைக்கப்படுகிறார். இறுதி சடங்கினை முன்னின்று நடத்தினார். தொடர்ந்து அதே பல்லக்கில் மதுரகவி ஸ்ரீ ராமானுஜ ஜீயர், மடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., முத்துச்செல்வி, எம்.பி., முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தோத்தாத்ரி நாதர் ஆலயத்தில் சித்திரை தேரோட்ட விழா இன்று (2ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.