பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
பொதட்டூர்பேட்டை: காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் மண்டலாபிஷேகம், நேற்று நிறைவு பெற்றது. இதில், திருவண்ணாமலையில் இருந்து, கொண்டு வரப்பட்ட, ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச லிங்கத்தை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொதட்டூர்பேட்டை அடுத்த, பாண்டாரவேடு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைக்கப்பட்டு, கடந்த மார்ச் 12ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று நிறைவு நாள் அபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணியளவில், கோவில் முன் மண்டபத்தில், யாகம் வளர்க்கப்பட்டது. புனிதநீர் அடங்கி, கலசங்களுக்கு பூஜை நடந்தது. 12:00 மணிக்கு மூலவர், காமாட்சியம்மன், முருகர், விநாயகர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேகத்தை ஒட்டி, திருவண்ணாமலையில் இருந்து, ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்க ரதம், கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. பக்தர்கள், இந்த லிங்கத்தை தரிசனம் செய்தனர். பின், கலச நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இரவு, பொதட்டூர்பேட்டை நால்வர் உழவார மன்றத்தினரின், சிவ பூத கண வாத்திய முழக்கத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.