பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
கூடலூர்:கூடலூர் நம்பாலகோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கு, நிலம்பூர் கோவிலம் சார்பில், புதிய பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் வசமிருந்த, நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவில் நிர்வாகம், கடந்த 2009 ஏப்ரல் 13ம் தேதி முதல் இந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், "தங்கள் நிர்வாகத்தின் கீழ் கோவிலை ஒப்படைக்க வேண்டும் என, கேரளா மாநிலம் நிலம்பூர் தனியார் கோவிலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விசாரணைக்கு பின், 2013 ஆக்., 13ம் தேதி கோர்ட் பிறப்பித்த உத்தரவில், "கோவில் நிர்வாகத்தை நிலம்பூர் கோவிலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிராக, வருவாய் துறையினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே நிலம்பூர் கோவிலம் சார்பில் தொடரப்பட்ட கோர்ட் அவமதிப்பு வழக்கு, விசாரணை கடந்த 28ம் தேதி நடந்த ஐகோர்ட் டில் நடந்தது. கூடலூர் ஆர்.டி.ஓ., ஜெகஜோதி கோர்ட்டில் ஆஜராகி, கோவில் நிர்வாகத்தை 29ம் தேதி ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதன்படி கோவில் நிர்வாகத்தை 29ம் தேதி ஆர்.டி.ஓ., நிலம்பூர் கோவிலக செயல் அலுவலர் மானுவேதனிடம் ஓப்படைத்தார். கோவில், சாவி மற்றும் பொருட்களை ஒப்படைக்கும் பணி, நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து அறநிலைய துறை வசமிருந்த, கோவில் சாவி உள்ளிட்ட பொருள்களை, ஆர்.டி.ஓ., பெற்று, நிலம்பூர் கோவிலகத்திடம் ஒப்படைத்தார். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலம்பூர் கோவிலக நிர்வாகம் சார்பில், கோவிலுக்கு புதிய பூஜாரி நியமிக்கப்பட்டு, பூஜைகள் துவக்கப்பட்டது. "விரைவில் இங்குள்ள மக்களை இணைத்து கமிட்டி அமைக்கப்படும் என, நிலம்பூர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி கோவிலுக்கு சென்று விபரங்களை கேட்டறிந்து, "கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்; இதற்கான சட்ட நடவடிக்கைக்கு தேவையான உதவிகளை செய்யப்படும் என, தெரிவித்தார்.