பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவில் சமுதாயங்களின் மண்டகப்படிகள் துவங்கி நடந்து வருகிறது. சின்னமனூரில் உள்ள சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில், செப்பேடுகள் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும், இக்கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா, இந்தாண்டு நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் மாலை, மண்டகப்படி துவங்கி, அம்மன் ஏக சப்பர பவனி நிகழ்ச்சி நடந்தது. இன்று (மே 5) தேருக்கு முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும்,தேர், தலை அலங்காரம், சுவாமி-அம்மன் ஏக சப்பர பவனி, சுப்பிரமணிய சுவாமி மயில்வாகன பவனி நடைபெறும். தொடர்ந்து, மே 20 ம் தேதி வரை, நகரில் உள்ள பல்வேறு சமுதாயங்களின் மண்டகப்படிகள் 18 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும், அந்தந்த சமுதாயங்களின், மண்டகப்படியில், சுவாமி-அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா, ஏகசப்பர பவனி, புஷ்ப பல்லக்கு, மயில் வாகன, சிம்மவாகன பவனி, நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இம்மாதம் 10 ம் தேதி, சுவாமி-அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 11, 12 ம் தேதிகளில், தேர்த்திருவிழாவும் நடைபெறும். மண்டகப்படி ஏற்பாடுகளை சமுதாயத் தலைவர்கள், நிர்வாகிகள், விழா கமிட்டியினரும், கோயில் விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி ரம்ய சுபாஷினி, தக்கார் சுரேஷ், கணக்கர் மோகன் செய்து வருகின்றனர்.