தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் மழை வேண்டி கிராம வனதேவதைக்கு நெல் மாவு அறைத்து பூசும் வழிபாடு நடந்தது. தாண்டிக்குடி குடக்கு மந்தையில் உள்ளது கிராம வன தேவதை. இங்கு ஆண்டுதோறும் ஒரு வார சாட்டுதலுடன் வாழைப்பழம் படைத்தும், தீர்த்தம் எடுத்தும் வழிபாடு நடக்கும். தொன்று தொட்டு கிராம பட்டக்காரர், கிராம கோயில் மேலாளார் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவர். இந்த வழிபாட்டால் மேல்மலை, கீழ்மலை கிராமங்கள் மழை பெய்து செழிப்புடன் திகழ வேண்டும் என்பது ஐதீகம். இதில் கிராம கோயில் பூசாரிகள், ஆதிவாசி சமுதாயத்தை சேர்ந்த பூசாரிகள் கலந்து கொண்டனர். வழிபாட்டில் கிராம தேவதை சிலைக்கு நெல்லினால் அறைத்த மாவு பூசுதல் நடந்தது. கிராம கோயில் மேலாளார் இளங்கோவன், பெரிய கோயில் பூசாரி கோவிந்தசாமி கலந்துகொண்டனர். இதுகுறித்து கிராம பட்டக்காரர் மங்களகாந்தி கூறுகையில், ""நெல் மாவு பூசப்பட்ட சிலையில் மழை பெய்து நெல் மாவு கரைய வேண்டும். இதை தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி கீழ்மலை கிராமங்களில் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, என்றார்.