சித்ரகுப்த நாயனார் கதை படிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2014 01:05
துறையூர்: சித்ரா பவுர்ணமியன்று கோவிலில் சித்ரகுப்த நாயனார் கதை படிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பவுர்ணமி திதியில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்ரா பவுர்ணமி ஆகும். சித்திரை மாதத்தில் தமிழ் வருடப்பிறப்பு, பவுர்ணமி, அம்மன் வழிபாடு என தமிழகத்தில் இந்துக்கள் வழிபாடு இருக்கும். சித்ரா பவுர்ணமியில் விரதம் இருந்து கோவில் மற்றும் ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வர். சித்ரா பவுர்ணமியன்று எமதர்மராஜாவிடம் கணக்கு பிள்ளையாக உள்ள சித்ரகுப்தனுக்கு அவதார நாள் என்பதால் சித்ரகுப்த நாயனார் கதையை கோவில்களில் முன்னோர்கள் படிப்பது வழக்கம். விரதமிருந்து சித்ரகுப்த நாயனார் கதையை ஒருவர் படிக்க அனைவரும் அமர்ந்து கேட்பது வழக்கமாக இருந்தது. கதை படித்ததுமே கோவிலில் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்படும். இதில் தவறு செய்தால் அதற்கேற்ப சித்ரகுப்தன் கணக்கு எழுதி வைத்து ஒவ்வொருவரும் இறந்த பின் தண்டனை கிடைக்கும் என கருதி தவறு செய்ய அஞ்சினர். தவறு செய்தாலும் அதற்காக வருந்தினர். இந்த பழக்கம் தற்போது மறைந்து விட்டது. மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் மக்கள் கோவிலுக்கு வருவதையே பெரிய வேலையாக கருதுகின்றனர். பண்டிகைகள், விழாக்கள் தொடர்பான கலாச்சாரம் தமிழகத்தில் இளம்தலைமுறையினருக்கு அறிமுகம் ஆகாததால் தொடர்ந்து அதை கடைபிடிக்காதது ஒரு காரணமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விழாக்கள் பண்டிகைகள் தொடர்பான பழக்கவழக்கம் குறித்து அனைவருக்கும் தெரிவிப்பது இந்து சமய அறநிலைய துறையின் பணியாகும். வரும் 14ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கோவிலில் சித்ரகுப்த நாயனார் கதை படிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.