பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
தேனி: மங்களதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவிற்கு, பக்தர்கள் செல்ல வசதியாக கோயிலுக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் ஓய்வெடுக்க நிழற்பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. தமிழக கேரள வன எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி விழா மே14ம் தேதி நடக்கிறது. கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக 13 கி.மீ., தூரம் ஜீப்பில் அல்லது நடந்து செல்லலாம். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடிசையில் இருந்து, தமிழக வனப்பகுதி வழியாக 6 கி.மீ., தூரம் நடந்து செல்ல முடியும். இந்த பாதைகள் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் செல்வதற்காக சீரமைக்கப்படும். தற்போது, கேரள வனப்பகுதிக்குள் உள்ள பாதைகளை கேரள வனத்துறையினரும், தமிழக வனப்பகுதிக்குள் உள்ள பாதையை தமிழக வனத்துறையினரும் சீரமைத்து வருகின்றனர். கோயிலில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடக்கின்றன. பளியன்குடிசையில் இருந்து செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக, பளியன்குடிசை மலையடிவாரத்தில் தண்ணீர் வசதியுடன் கூடிய நிழற்பந்தல் அமைக்கப்படுகிறது. இங்கு ஒரு மருத்துவக்குழுவும் இருப்பர். பக்தர்கள் பொங்கல் வைக்கவும், அன்னதானம் வழங்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரள பாதை வழியாக வரும் பக்தர்கள் வசதிக்காக வனப்பாதையில் 13 இடங்களில், ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. கண்ணகி கோயில் முன், தமிழக மற்றும் கேரள மருத்துவக்குழுக்கள் தனித்தனியே முகாம் நடத்துகின்றனர். இதற்கான நிழற்பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.கோயில் அருகே பக்தர்கள் பொங்கல் வைக்கவும், அன்னதானம் வழங்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக, கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.