பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
திருப்புவனம்: எலுமிச்சை பழங்களின் விலை உயர்வால், சிவகங்கை அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனுக்கு, காணிக்கையாக செலுத்தும் எலுமிச்சை பழ மாலை, விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் சன்னதியில், வேண்டிய வரம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள உக்கிர தெய்வமான காளியின் கோபத்தை தணிக்க, பக்தர்கள் எலுமிச்சம் பழ மாலை சாத்துவது வழக்கம். இதனால், இங்குள்ள கடைகளில், பூக்களை விட, எலுமிச்சை மாலைகள் தான் அதிகம் விற்கப்படும். இங்கு, குறைந்தபட்சம் 11 பழங்கள் உள்ள சிறிய மாலை முதல் 1,001 பழங்கள் உள்ள பெரிய மாலை வரை விற்கப்படும். எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகம் இருந்த போது, ஒரு மாலை 50 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைந்து விட்டதால், அதிக பட்சம் 1,001 பழங்களை கொண்ட பெரிய எலுமிச்சை மாலை, 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை உயர்ந்த போதும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி, கூடுதல் விலை கொடுத்து வாங்கி, பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சை மாலையாக செலுத்துகின்றனர்.
இது குறித்து, வியாபாரி காந்தி கூறுகையில், " மதுரை, மார்க்கெட்டிற்கு பெங்களூரு, ஆந்திரா, கேரளா மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரத்து இருந்தது. தற்போது, மழை இல்லாததால், வரத்து குறைந்துவிட்டது. வரத்து நன்றாக இருந்தபோது, ஒரு மூடை (40 கிலோ) எலுமிச்சை 1,800 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. தற்போது, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாயாக விலைஉயர்ந்துள்ளது. லாரி வாடகை, ஏற்று இறக்கு கூலி, சம்பளத்தை கணக்கிட்டு, எலுமிச்சை மாலைக்கு விலை நிர்ணயிக்கிறோம், என்றார். மதுரை பக்தர் திருப்பதி கூறுகையில், " ஒரு வாரத்தில் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மடப்புரம் வந்து விடுவேன். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவேன். தற்போது, விலை உயர்ந்துவிட்டது. இருந்தாலும்,நேர்த்தி செலுத்தும் நோக்கில், கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறேன்,” என்றார்.