பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பழுதான தேர் புதுப்பிக்கப்பட்டதால், 60 ஆண்டுக்குபின், மாதேவர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, பக்தர்களும், விழாக்கமிட்டியினரும் ஏற்பாடு செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் பழமை வாய்ந்த பிந்து மாதேவர் கோவில் உள்ளது. இக்கோவிலை, கிருஷ்ண தேவராயர் பராமரித்ததாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 60 ஆண்டுக்கு முன், தேர் பழுதடைந்ததால், விழா நடப்பது நிறுத்தப்பட்டது. மிகவும் பழமையான, இக்கோவிலில் புதிய தேர் செய்து, தேர்த்திருவிழா நடத்த பக்தர்கள் முடிவு செய்து, கமிட்டி கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக, சுரேஷ் பாபு, செயலாளர் சுரேந்திர குமார், இணை செயலாளர் ஜெய்சங்கர், துணைத் தலைவராக பாபு சுப்பிரமணி, துணை செயலாளர் ஏகநாதன், பொருளாளர் சாய்நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைமையில், தேர் திருப்பணி கமிட்டியினர் மக்கள், பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்தும், இந்து அறநிலையத்துறை அளித்த, 10 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தம், 45 லட்ச ரூபாய் மதிப்பில், 24 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேக்கு மரத்தாலான தேர் உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்டம், சில தினங்களுக்கு முன்பு நடந்தது. விரைவில், தேர்த்திருவிழா நடக்குமென, திருத்தேர் திருப்பணி கமிட்டி தலைவர் சுரேஷ்பாபு, இணை செயலாளர் ஜெய் சங்கர் ஆகியோர் தெரிவித்தனர். 60 ஆண்டுக்கு பின் பிந்துமாதேவர் கோவில் தேர்த்திருவிழா நடப்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.