பதிவு செய்த நாள்
13
மே
2014
06:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் கொண்டு செல்லும், மொபைல் போனுக்கு தகவல் தொடர்பு துண்டிக்க, 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக, கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார், தடை விதித்தனர். மேலும் கோயில் கிழக்கு, மேற்கு வாசலில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், பக்தர்களை தீவிர சோதனை செய்த பிறகே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னை ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்ததால், ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பை பலத்தப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி சில நாள்களுக்கு முன்பு, கோயிலுக்குள் பணிபுரியும் ஊழியருக்கு வாக்கி, டாக்கி வழங்கிட, மொபைல் டவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து, கோயிலுக்குள் மொபைல் போன் மூலம், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் முதல் பிரகாரத்தில், மொபைல் போனுக்கு தகவல் தொடர்பை துண்டிக்க, இரு சன்னதியை சுற்றி 20 மீட்டர் இடைவெளியில், 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டது.
இதுகுறித்து கோயில் ஊழியர் கூறியதாவது: கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு மொபைல் போன் மூலம் அசம்பாவிதம் ஏற்படுத்துவதை தடுக்க, இரு சன்னதிகள், முதல் பிரகாரத்தில் பக்தர்கள் வைத்திருக்கும் மொபைல் போன் தகவல் இணைப்பு துண்டிக்க, 4.50 லட்சத்தில், 15 ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே, கோயிலுக்குள் பக்தர்கள் மொபைல் போன் எடுத்து செல்ல வேண்டாம் என, தெரிவித்தார்.