பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டையில் உள்ள, கி.பி., 13ம் நூற்றாண்டு சிவன் கோவிலில்,25 ஆண்டுகளுக்கு முன் திருடு போய் மீட்கப்பட்ட அம்மன் சிலை, மீண்டும் திருடு போய் உள்ளது. இதையடுத்து பழமையான கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆர்.கே.பேட்டை, குளக்கரை வீதி அருகே, கி.பி., 13ம் நூற்றாண்டில், சோழர் கால பாணியில் கட்டப்பட்ட, வாடாவல்லி உடனுறை விசாலீஸ்வரர் கோவில் உள்ளது.
என்னென்ன சிலைகள்? கோவில், மாநில தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல்வரின் ஒரு கால பூஜை திட்டம் நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. அந்த பூஜையை மட்டும், இந்து சமய அறநிலைய துறை மேற்கொண்டு வருகிறது. கோவிலின் அர்ச்சகராக நாகமணி என்பவரும், வடிவேலு காவலாளியாகவும் உள்ளனர். சந்திரசேகரர், பவானி, பிரேதாஷ நாதர், அஸ்திரதேவர், விநாயகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் மட்டும், கோவிலில், கருவறைக்கு முன்னுள்ள அர்த்தமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, வேறு உற்சவ மூர்த்தி சிலைகள் இல்லை என, கூறப்படுகிறது.
நடந்தது என்ன?: நேற்று முன்தினம், பிரதோஷம் என்பதால், கோவில் காவலாளி வடிவேலு அன்று மதியம் 1:30 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அர்த்தமண்டபத்தில், உற்சவ மூர்த்தி சிலைகள் இருந்துள்ளன. பின், பூஜை பொருட்களை சேகரிப்பதில் தீவிரமாக இருந்தார். மதியம் 2:30 மணியளவில், யாகசாலை பூஜை முடிந்து, நந்திக்கு அபிஷேக, அலங்காரம், பிரதோஷ நாதர் உலா, பிரசாத வினியோகம் நடந்தன. இவை முடிவதற்கு இரவு ௭:௦௦ மணி ஆனது. அதன்பின், கோவிலை பூட்டுவதற்காக, நாகமணியும், வடிவேலுவும் முற்பட்ட போது, சந்திரசேகரர் அருகில் இருந்த பவானி அம்மன் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
25 ஆண்டுகளுக்கு முன்...: தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார், அன்று இரவு 10:00 மணியளவில் கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை மோப்பநாய் உதவியுடன், கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்து சமய அறநிலைய துறை, திருத்தணி ஆய்வாளர் பார்த்தசாரதி, இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், தற்போது காணாமல் போன அம்மன் சிலை திருடு போனது. பின், வேலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிலை கடத்தல் மன்னன், சுபாஷ் கபூர், இதுபோன்ற பாதுகாப்பற்ற கோவில்களில் இருந்து தான், சிலைகளை கடத்தினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை மணி அவசியம்: இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: அறநிலைய துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும், அறநிலையதுறை சட்டம் 29ன் கீழ் தயாரிக்கப்பட்ட, கோவில் ரிஜிஸ்டர் என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து சிலைகளும் இன்று இருக்கின்றனவா என்ற ஆய்வு முதலில் செய்யப்பட வேண்டும். கோவில்களை, 100௦௦,200௦௦, 500௦௦,1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்ற அடிப்படையில் வகுத்து, அவற்றில் உள்ள உலோக, கற்சிலைகள், மண்டபங்கள், தூண்கள், அவற்றில் உள்ள புடைப்பு சிற்பங்கள் ஆகியவை பற்றிய முழு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவை ஆவணமாக்கப்பட வேண்டும். இதில், அறநிலைய துறை, தனியார், வழிபாடு நடப்பவை, நடக்காதவை என்ற பாகுபாடு கூடாது. அவை அனைத்தும், அறநிலைய துறை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். அனைத்து கோவில்களிலும், மின்வெட்டின் போதும், இயங்க கூடிய, எச்சரிக்கை மணி ஒலிக்கும் இயந்திரத்தை பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.