செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி தேர் திருவிழா நடந்தது. செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மனுக்கு பல நூறு ஆண்டுகளாக சித்திரை மாதம் தேர்திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டி துவங்கினர். கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து வந்தனர். இரவில் சுவாமி வீதியுலா நடந்தது. 9ம் நாள் திருவிழாவாக நேற்று காலை மாரியம்மனுக்கு 1008 பால் குடம் எடுத்தனர். கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 2.30 மணிக்கு கோட்டையில் உள்ள ராஜகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து பாரம்பரிய பூஜைகளை செய்து பூங்கரகம் மற்றும் திரிசூலம் எடுத்து வந்தனர். மாரியம்மன், கமலக்கன்னியம்மன், திரிசூலத்துடன் தேர் பவனி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அறங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், பீரங்கி மேடு பொது மக்கள் செய்தனர். கணேஷ்குமார் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு செஞ்சிக்கோட்டைக்கு பொதுமக்கள் சென்று வர இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கினர்.