பதிவு செய்த நாள்
14
மே
2014
03:05
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், நேற்று இரவு, பூசாரி கையால், திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, 29ல், சித்திரை பெருவிழா துவங்கியது. 30ல், பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு தாலிக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு, சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த திருநங்கைகள், பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. ருநங்கைகள் தேர் செல்லும் வழியில், 108 தேங்காய் வைத்தும், குவியல்களாக கற்பூரம் ஏற்றியும் கும்மியடிப்பர். தேரோட்டத்தின்போது, நிலங்களில் விளைந்த பொருட்களை விவசாயிகள் சுவாமி மீது வீசி, நேர்த்திக் கடன் செலுத்துவர்.தொடர்ந்து, நத்தம், தொட்டி வழியாக, தேர் பந்தலடியை சென்றடைகிறது. பகல், 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைப்பர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு, ஊருக்கு திரும்புவர். மாலை, 5:00 மணிக்கு உறுமை சோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாலை 7:00 மணிக்கு, காளிக் கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.