பதிவு செய்த நாள்
15
மே
2014
11:05
மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழா மே 10ல் துவங்கியது. மே 12ல், கள்ளர் திருக்கோலத்தில் பச்சைப்பட்டுடுத்தி, அழகர் மதுரைக்கு புறப்பட்டார். மூன்று மாவடியில் நேற்று முன்தினம் எதிர்சேவை நடந்தது. இரவு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும், ஸ்ரீவில்லிப்புத்துார் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வெண்பட்டு அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருக்கு பச்சைப்பட்டு சார்த்தப்பட்டு தங்கக்குதிரை வாகன உலா புறப்பாடானது. அழகர் ஆற்றில் இறங்குவதற்கு வசதியாக, ஆற்றில் 50 அடி நீளம் 7 அடி உயரத்தில் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டிருந்தது. ஒருமண்டகப் படியில் அழகரை வரவேற்க வண்டியூர் வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார். மற்றொரு மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருள வசதியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் : தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்தபடி காலை 6.11 மணிக்கு வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளினார். கள்ளழகர் சார்பில் வீரராகவப் பெருமாளுக்கும், இவரது சார்பில் கள்ளழகருக்கும் மரியாதை செய்யப்பட்டது. கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். சர்க்கரை, மாவிளக்கு ஏற்றியும், மொட்டையடித்தும், தண்ணீர் பீச்சியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வைகை ஆற்றில் : எழுந்தருளிய கள்ளழகருக்கு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் முடிந்ததும் காலை 7.15 மணிக்கு ஆற்றில் இருந்து கள்ளழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அங்கிருந்து மாலை புறப்பாடாகி வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.