பதிவு செய்த நாள்
16
மே
2014
08:05
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருவையாறிலுள்ள ஐயாறப்பர் ஸ்வாமி, சப்த ஸ்தான பெருவிழாவில் கோபுர தரிசனம் காணும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை மாவட்டம், திருவையாறிலுள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. இதில், அறம் வளர்த்த நாயகி மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் திருத்தேரில் வலம் வந்து, ஐயாறப்பர் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இதன் முக்கிய விழாவாக திகழும் சப்த ஸ்தான பெருவிழா கடந்த, 14ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஐயாறப்பர் ஸ்வாமி, அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு, கோபுர தரிசனம் கண்டனர்ர். இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். தொடர்ந்து, ஐயாறப்பர் ஸ்வாமிகள் மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் கூட்டம் புடைசூழ, திருவையாறு நகரத்தை கோலாகலமாக வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களுக்கு பல்லக்கு சென்று, அந்தந்த கிராம பல்லக்குடன் சேர்ந்து, 6 ஊர் பல்லக்குகளும் நேற்று தில்லை ஸ்தானம் காவிரி ஆற்றங்கரையை அடைந்தது. அங்கு, தயாராக இருந்த தில்லை ஸ்தான பல்லக்குடன் சேர்ந்து, 7 ஊர் பல்லக்கு ஸ்வாமிகளை பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாட்டை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் தலைமையில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.