பதிவு செய்த நாள்
19
மே
2014
12:05
ஈரோடு: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், வரும் ஒன்பதாம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. காவிரி ஆறு, பவானி ஆறு, அமிர்த நதிகள் சங்கமிக்கும் இடமே பவானி சங்கமேஸ்வரர் கோவில். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் முக்கூடல் சங்கமத்தில் நீராடிய பின் சங்கமேஸ்வரர் கோவிலில் தினமும் வழிபாடு செல்கின்றனர். இது தவிர, குழந்தை பாக்கியம் இல்லாதோர், தோஷம் நீக்குவோர், திதி செய்வோர், பரிகாரம் செய்து முக்கூடலில் குளித்து விட்டு செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர், சவுந்திரவல்லி உடனமர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தற்போது சுமார் 3.50 கோடி ரூபாய் திருப்பணிகள் நடக்கிறது. வரும் ஒன்பதாம் தேதி காலை ஆறு முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை, காலை 7.30 மணிக்கு மேல், கணபதி வேள்வி மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடக்கிறது. வரும் ஆறாம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி துவங்குகிறது. ஏழாம் தேதி காலை ஆறு மணிக்கு மேல் இரண்டாம் காலயாக வேள்வியும், மாலை நான்கு மணிக்கு மேல் மூன்றாம் காலயாக வேள்வி நடக்கிறது.
வரும் எட்டாம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் ஆறு மணிக்கு சுற்று பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், காலை ஒன்பது மணிக்கு மேல், நான்காம் காலயாக வேள்வியும், மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்தாம் காலயாக வேள்வி நடக்கிறது. ஒன்பதாம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு மேல் ஆறாம் காலயாக வேள்வி, ஆறு மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஜகோபுரம், மூலவர் விமானங்கள், வேதநாயகி அம்மன், உடனுமர் சங்கமேஸ்வரருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஆதிககேசவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் ஒன்பதாம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அனைத்து பக்தர்களுக்கும் காலை எட்டு மணி முதல் அன்னதானம் வழங்கப்படும். மாலை ஐந்து மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு எட்டு மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. கோடி அர்ச்சனை மண்டபத்தில் பரிவார மூர்த்திகளுக்கான யாகசாலைகளும், வெளிபுறத்தில் ஈஸ்வரர் உட்பட பல ஸ்வாமிகளுக்கான 94 குண்டங்கள் அமைக்கபட உள்ள நிலையில் 120 அடி நீளமும், 75 அடி அகமும் கொண்ட பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி, தொழிலாளர்கள் மூலமாக தீவிரமாக நடக்கிறது. கோவில் தக்கார் நடராஜன், துணை கமிஷனர் மற்றும் செயல் அலுவலர் பழனிக்குமார் ஆகியோர் ஏற்பாடுளை செய்து வருகின்றனர்.