அவலூர்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரம் கிராமத்தில் உள்ள பழமையான வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 12 ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதிஉலா நடந்தது. தொடர்ந்து 7வது நாளான நேற்று (18 ம்தேதி) காலை 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாட வீதி வழியாக தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அறங்காவலர் ஈஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தமிழ்வாணன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.