பதிவு செய்த நாள்
21
மே
2014
11:05
காங்கயம் : காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 4ம் தேதி காலை 9.00 முதல் 10.00 மணிக்குள், நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவில் அலுவலகத்தில் நடந்தது. காங்கயம் எம்.எல்.ஏ., நடராஜன் தலைமை வகித்தார். இணை கமிஷனர் நடராஜன், துணை கமிஷனர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் (பொ) நந்தகுமார் கூறியதாவது: சிவன்மலை கோவிலில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வருகிறது. ஆலோசனை கூட்டத்திலேயே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை செய்ய, நன் கொடையாளர்கள் முன்வந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம், பூஜிக்கப்பட்ட மலர் தூவவும், புனித தீர்த்தம் தெளிக்கவும் ஏற்பாடு செய்வது, நன்கொடையாளர் மூலமாக பஞ்சவர்ண பூச்சுவேலையை முடிப்பது, பல்வேறு தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது, முளைப்பாரி ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது, என்றார்.