பதிவு செய்த நாள்
26
மே
2014
12:05
திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கீழபாலையூர் ஐயனார் கோவில் பூட்டை உடைத்து, மூன்று ஐம்பொன் சிலைகள் மற்றும், இரண்டு பித்தளை சிலைகளை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் அருகே உள்ள கீழபாலையூரில் பிரசித்தி பெற்ற ஐயனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பூசாரியாக, அதே ஊரை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் இருந்து வருகிறார். குருமூர்த்திக்கு வயதாகிவிட்டதால், அவரது மகன் கஜேந்திரன் என்பவர் பூஜை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பூஜைகளை முடித்து விட்டு, மூலவர் உட்பட அனைத்து சன்னதிகளையும், கஜேந்திரன் பூட்டிச் சென்றார்.
நேற்று காலை, கோவிலுக்கு வந்த போது, அனைத்து இரும்பு கேட்டுகளும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கஜேந்திரன், உடனடியாக ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது, கோவிலில் இருந்த, ஐம்பொன்னாலான, இரண்டு அடி உயரமுள்ள ஐயனார் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள பூர்ணாம்பிகா சிலை, புஷ்பாம்பிகா சிலைகளும், பித்தளையால் ஆன மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் சிலைகளும் காணாமல் போயிருந்தது. அறநிலையத்துறை ஆய்வாளர் ராதா அளித்த புகார்படி, கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை செய்ததில், அதே ஊரில் உள்ள குளம் வரை மோப்ப நாய் ஓடி, அங்கேயே படுத்து கொண்டது. சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார், அறநிலையதுறை உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.