தெய்வாம்சமான பசுவை பார்த்தாலும், தொட்டாலும் பாவம் தீரும். பசுவைக் கழுவி குளிப்பாட்டுவது, ஸ்தோத்திரம் சொல்லி வணங்குவது, கொம்புகளை வர்ணம் தீட்டி அலங்கரிப்பது, அதன் உடம்பெங்கும் மஞ்சள் பூசுவது, அகத்திக்கீரை, பழவகைகள், காய்கறிகள், பொங்கல், கழுநீர் உண்ணக் கொடுப்பது, வலம் வந்து நமஸ்கரிப்பது ஆகிய அனைத்தும் பசுவை வணங்குவதற்கான நெறிமுறைகள். பசுவின் கொட்டிலில் ஜெபிக்கும் ஜபம் மற்றும் மந்திரத்திற்கு பலன் அதிகம். கோபூஜை செய்தவருக்கு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டாவதாக பத்மபுராணம் கூறுகிறது. ஒருவர் கோதானம் செய்து, அவர் இறந்து போனால், நரகத்திலுள்ள ரத்தமும் சலமும் கலந்த விரஜை நதியைக் கடக்க, பசுவே உதவுவதாக கருடபுராணத்தில் தகவல் உள்ளது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும் என்கிறது விஷ்ணுபுராணம்.