கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 4ம் தேதி வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைக்கட்டு உற்சவம் நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் அமாவாசைக்கு முதல் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைக்கட்டு உற்சவம் நடந்தது. அதனையொட்டி மார்க்கெட் காலனியில் ஆடு மற்றும் கத்திக்கு சிறப்பு பூஜை செய்து, இளைஞர்கள் ஊர்வலமாக பாடலீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதிக்கு வந்தனர். அங்கு ஆட்டை பலி கொடுத்த பின் இளைஞர்கள் தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு முக்கிய சாலைகள் வழியாக எல்லை கட்டி இறுதியாக தேரடி வீதியை வந்தடைந்தனர். தொடர்ந்து நேற்று காலை வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள அமர்ந்தவாழியம்மன் கோவிலில் கொடியேற்றி சிறப்பு பூஜை நடந்தது. இரவு கொடியிறக்கம் செய்து, அதனை இரவு 11:00 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் கொடியேற்றினர். இன்று முதல் வரும் 2ம் தேதி வரை வண்ணார மாரியம்மன் மற்றும் பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது. வரும் 3ம் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் விநாயகர் பூஜை மற்றும் புற்று மண் எடுத்தல் உற்சவம் நடக்கிறது. மறுநாள் 4ம் தேதி காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் வைகாசி பெருவிழா துவங்குகிறது.