பழமையான திரவுபதியம்மன் கோவில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2014 12:05
தியாகதுருகம்: தியாகதுருகம், புக்குளம் எல்லையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. தியாகதுருகம், புக்குளம் எல்லையில் நூற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் அருகில் உள்ள பாறையில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்ட கண்காணிப்பு கட்டடம் தற்போது சிதைந்து விட்டது. மலையில் உள்ள கோட்டையும், அதையொட்டிய பகுதியும் திப்புசுல்தான் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, இங்கிருந்த திரவுபதியம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்துள்ளனர். இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில், முத்தால் ராவுத்தர் என்பவரின் சன்னதியை கட்டினர். இதனால் இக்கோவிலை இடிக்காமல் விட்டதாக செவிவழி செய்தி உள்ளது. அதற்கு ஆதாரமாக இக்கோவில் வளாகத்தில் இன்னும் முத்தால் ராவுத்தர் சன்னதி உள்ளது. பழமையான இக்கோவில் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து பக்தர்கள் முயற்சியால் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் அருகில் விநாயகர், மாரியம்மன், முத்தால் ராவுத்தர் சன்னதியும் செப்பனிடப்பட்டது. ராஜகோபுரம், மூலவர் விமானம் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் உள்ள பாறைமீது 23 அடி உயர ஆஞ்சனேயர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.