ராமநாதபுரம் : ராமநாதபுரம் எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் நகர் செல்வகணபதி, பகவதிஅம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு பூஜை மே 31ம் தேதி மாலை துவங்கியது. இதையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் யாக பூஜைக்கு பின் , கடங்கள் புறப்பாடாகி, காலை 10.10 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அங்காரம், தீபாராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆண்டிபண்டாரம் சமூகத்தார் செய்திருந்தனர். மாலங்குடி செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் மே 30ம் இரவு முதல் யாகபூஜையுடன் துவங்கியது. மே 31ம் தேதி காலை இரண்டாம் யாகபூஜை, மாலை மூன்றாம் யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை நான்காம் யாகபூஜை, கடங்கள் புறப்பாடுகளுக்கு பின் 10.30 மணிக்கு கோபுர கலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, மகளிர், இளைஞர் மன்றம், கிராம பொதுமக்கள் செய்தனர். செம்பொன்குடி ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் மே 31ம் தேதி மாலை யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் யாகபூஜை, கடங்கள் புறப்பாடாகி 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாடானை: திருவாடானை அருகே கருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கோயில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சாயல்குடி: சாயல்குடி அருகே செவல்பட்டியில் சித்தி விநாயகர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு கோயிலுக்கும் நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு சித்திவிநாயகருக்கும், 10.15 மணிக்கு வரதராஜபெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.