பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
குருவித்துறை: வரும் ஜூன் 13 ல், மாலை 6:03 மணிக்கு குருபகவான் மிதுனம் ராசியில் இருந்து கடக ராசிக்கு இடபெயர்ச்சியாகிறார். இதையொட்டி மதுரை, சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோயிலில், குருபெயர்ச்சி விழா நடக்கிறது. முன்னதாக, ஜூன் 11 ல், காலை 10:30 க்கு அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்கி, ஜூன் 12 ல் மதியம் 1:00 மணிக்கு முடிகிறது. இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி சுமதி கூறியதாவது: லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்கள் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் ரூ.300 கட்டணம் செலுத்தினால், குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் சுவாமி பிரசாதம் வழங்கப்படும் ரூ.100 செலுத்துபவர்களுக்கு, பிரசாதம் மட்டும் வழங்கப்படும். ஜூன் 13 ல் மாலை 3:00 மணிக்கு பரிகார பூஜை, மகாயாகம், திருமஞ்சனம் சாத்துதல், மங்கள ஆரத்தியுடன், அர்ச்னை நடக்கிறது. மாலை 6:03 க்கு குருபகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. லட்சார்ச்சனை டிக்கெட்டுகள் திருமோகூர், ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், தென்கரை மூலநாதர் சுவாமி கோயிலில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 97902 95795 ல் தொடர்பு கொள்ளலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்கு கட்டணம் இல்லை, சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார். ஊராட்சி தலைவர் கர்ணன், துணைத்தலைவர் பன்னீர், கோயில் ஊழியர் வெங்கடேசன் உடனிருந்தனர்.