பழமையும், நவீனமும் கலந்து மிளிரும் இடம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர். அற்புதமான கோயில்களும், நினைவுச் சின்னங்களும் இவ்வூரின் அடையாளம். திரிபுவனேஸ்வரர் கோயில்: காசிக்கு வீசம் அதிகம் என்று தமிழகத்திலுள்ள சில கோயில்களைச் சொல்வது போல, இங்குள்ள திரிபுவனேஸ்வரர் கோயிலும் புகழ்மிக்கது. காசியை விட இத்தலம் உயர்ந்தது என்பதற்கான காரணத்தை அறிய, பார்வதி தேவி புவனேஸ்வருக்கு வந்தாள். அப்போது அவளது அழகில் மயங்கிய கீர்த்தி, வாசன் என்ற அசுரர்கள் தங்களை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தினர். பார்வதி அவர்களிடம், என்னை உங்கள் தோளில் தூக்கி வையுங்கள். அதன்பிறகு உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும், என்றாள். தோளில் ஏறியவுடன் தன் எடையை பலமடங்காக அதிகரித்தாள். சக்திதேவியின் அபார சக்தியைதாங்காத அசுரர்கள் நசுங்கியே இறந்து போனார்கள். அவர்கள் இறக்கும் தருவாயில் சிவன் அங்கு வந்தார். அவரிடம் லோகமாதாவான பார்வதி மீது ஆசைப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்த அசுரர்கள், தங்கள் பெயரையே ஏற்று, அத்தலத்தில் குடிகொள்ளுமாறு சிவனிடம் வேண்டினர். சிவனும் கீர்த்திவாசன் என்ற பெயருடன் அங்கயே அருள்பாலித்து வருகிறார்.