ஆலங்குடி பெரியவாள் என போற்றப்படும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சுவாமியின் 79வது ஆராதனை விழா, திருவாரூர் அருகிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் நாளை தொடங்குகிறது. வேதத்தின் சாரமான பாகவதத்தின் பெருமையை உலகறியச் செய்த இவர், 1935, வைகாசி சுக்ல சதுர்த்தசியன்று நரசிம்ம ஜெயந்தி நாளில் ஸித்தியடைந்தார். இவரின் அதிஷ்டானம்(சமாதி) மயிலாடுதுறை- திருவாரூர் ரோட்டிலுள்ள முடிகொண்டானில் உள்ளது. இங்கு சுவாமியின் 79 வது ஆராதனை விழா, நாளை முதல் ஜூன் 10 வரை நடக்கிறது. தினமும் இரவு 7.00 மணிக்கு சென்னை ரவி ராம சர்மாவின் பாகவத உபன்யாசமும், 10.00க்கு டோலோத்ஸவமும் நடக்கிறது. ஜூன் 11 காலை 6.30க்கு அதிஷ்டானத்தில் வேதபாராயண பூர்த்தி, அதிஷ்டான பூஜை, மாலை 4.00 க்கு பாகவத உபன்யாச பூர்த்தி, 5.00 க்கு சுவாமியின் வீதியுலா, 6.00க்கு மங்கள ஹாரத்தி நடக்கிறது. இங்குள்ள ராதிகா ரமண வேணுகோபாலசுவாமி, குருநாதர் சந்நிதியில் நடக்கும் பாகவத பாராயணம் மற்றும் கோசாலை பராமரிப்பு ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்கலாம்.