பதிவு செய்த நாள்
04
ஜூன்
2014
12:06
அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில், சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலங்களுள், அருந்தவநாயகி உடனமர் ஆலந்துறையார் சிவன் கோவில் உள்ளது. தாயை கொன்ற பாவத்தை போக்குவதற்காக, பல இடங்களிலும் வழிபாடு நடத்திய பரசுராமர், கீழப்பழுவூர் தெப்பக்குளத்தில் நீராடி, அங்குள்ள ஆலந்துறையாரை வழிபட்டு, பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றதாக, புராணம் கூறுகிறது. சோழ மன்னர்கள் ஆட்சியில், 1,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட, இக்கோவிலில், நேற்று முன்தினம், யாக பூஜைகளுடன் பாலாலயம் நடைபெற்றது. தர்மபுரம் ஆதீன கட்டளை குமாரசாமி தம்பிரான் முன்னிலையில், நடந்த இவ்விழாவில், கோவில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், பாலாலய உபயதாரர்கள் ரவிச்சந்திரன், செல்வகாந்தி, முரளி, சத்தியமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.